வத்தளை துப்பாக்கிச் சூடு-உளவு பார்த்த இருவர் கைது

124 0

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  எலகந்த – ஹெந்தல வீதியில்   இளைஞர் ஒருவர்  அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கொலை தொடர்பில் உளவு பார்த்து, கொலையாளிகளுக்கு உதவியதாக கூறப்படும் இரு இளைஞர்களே இவ்வாறு வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24, 27 வயதுகளை உடைய குறித்த இரு இளைஞர்களையும் தடுப்புக் காவலில் வைத்துள்ள பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகிறது.

மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்த அடையாளம் தெரியாத நபர்கள், ரீ 56 ரக துப்பாக்கியைக் கொண்டு கடந்த 14 ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளதுடன், தாக்குதலின் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த கொழும்பு – 15, மட்டக்குளி, அலிவத்த பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இரு பாதாள குழுக்களிடையே, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட மோதல் வலுப்பெற்றமையால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்ட நிலையில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையிலேயே, கொல்லப்பட்ட 23 வயது இளைஞர் உடற் பயிற்சி கூடத்திலிருந்து வெளியேறும் போது அது குறித்த தகவலை கொலையாளிகளுக்கு வழங்கியதாக கூறப்படும் இளைஞரும், முச்சக்கர வண்டி ஒன்றின் ஊடாக கொலையாளிகளுக்கு உதவியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரும் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இதுவரை கொலையாளிகள் கைதுச் செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.