இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவம் உட்பட ஸ்ரீலங்கா அரச படையினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமென காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம வலியுறுத்துகின்றார்.
இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் பேரூந்துகளில் ஏற்றப்பட்டு, அழைத்துச்சென்றதற்கான சான்றுகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம, இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய படை அதிகாரிகளை அழைத்து, விசாரணை செய்ய தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளை 15ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையிலேயே அதன் தலைவரான மெக்ஸ்வெல் பரணகம நேர்காணலின்போது இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
“யுத்தத்தின் இறுதித்தருணத்தில் பேரூந்துகளில் ஏற்றப்பட்டுச் அழைத்துச்செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து எமது விசாரணைக் குழுவின் விசேட கவனம் திரும்பியுள்ளது. விசாரணைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. எமது விசாரணைக் குழு தனது அறிக்கையை சமர்பித்த பின்னர் சம்பவ இடத்தில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய்களை அழைத்து விசாரணை நடத்தவும் உத்தேசித்துள்ளோம். எனினும் இவை அனைத்தையும் செய்வதற்கு காலம் இல்லாததே பெரும் பிரச்சினையாக உள்ளது.
எதுஎவ்வாறாயினும் எமது கடமையை தவறமாட்டோம். நாம் எமது அறிக்கையில் உண்மையான விடயங்களை உள்ளடக்கி நடுநிலையான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கின்றோம். தவறுகள் இருபக்கத்திலும் இழைக்கப்பட்டிருக்கின்றன, எனவே விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம். ஆணைக்குழு அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் எந்தவொரு அமைப்புகளுக்கும் வழங்குவதில் எவரும் பின்வாங்கவேண்டிய அவசியம் இல்லை” – என்றார்.
எவ்வாறாயினும் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகளின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராத் அல் ஹுசைன், குறித்த ஆணைக்குழுவைக் கலைத்துவிடுமாறும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியிருந்தார்.
ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்ரீலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்திருந்ததுடன், கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற 32ஆவது கூட்டத்தொடரிலும் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் சர்வதேச சமூகத்திற்கோ, ஐக்கிய நாடுகள் சபைக்கோ ஸ்ரீலங்கா ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவைக் கலைக்குமாறு கூறுவதற்கு அதிகாரம் இல்லை என அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கூறுகின்றார்.
“கடந்தகாலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக நிலைவரத்தை ஆராய்ந்து உண்மையான அறிக்கையிடலை செய்வதற்கே ஜனாதிபதியினால் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. மாறாக ஐக்கிய நாடுகளுக்கோ, அரசசார்பற்ற நிறுவனங்களுக்கோ அல்லது சிவில் அமைப்புக்களுக்கோ தெளிவுபடுத்துவதற்காக இந்த ஆணைக்குழு அமைக்கப்படுவதில்லை.
இந்த விவகாரத்தில் சம்பவங்களை அறிந்துகொள்வதற்கு ஜனாதிபதிக்கு அவசியம் இருப்பதால் அவரால் அமைக்கப்படுகின்ற ஆணைக்குழுவுக்கும், ஜனாதிபதிக்குமே கொடுக்கல், வாங்கல் உள்ளது. எனவே மூன்றாம் நபருக்கு இந்த ஆணைக்குழுவை இடைநிறுத்துமாறு கூறமுடியாது. இதுபுதுமையான விடயமல்லவா.
இந்த சம்பவங்கள் குறித்து மேலதிகமாக தெரிந்துகொள்வதற்காக தொடர்ந்தும் விசாரணைகளை நடத்துமாறு கூறினால் அதிலும் தவறில்லை. அவ்வாறு ஜனாதிபதி தீர்மானித்தாலும் ஐக்கிய நாடுகள் சபைக்கோ அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களுக்கோ அல்லது சிவில் அமைப்புகளுக்கோ எதிராகதாக அமையாது. அவர்களுக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதனால் எமது ஆணைக்குழுவை கலைக்குமாறு அவர்கள் கூறுவதற்கு எந்தவொரு காரணமும் முன்வைக்கப்படவில்லை. நாங்கள் செய்த தவறுதான் என்ன? – என்ற ஆதங்கத்துடன் வினா எழுப்பினார்.
எனினும் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போரினால் பேரழிவைச் சந்தித்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மாத்திரமன்றி வடபகுதி மக்களும் பரணகம ஆணைக்குழுவினால் தமக்கு நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை என்று பகிரங்கமாகவே கூறியிருந்தனர்.
சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமாகவே தமக்கு நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர். அத்துடன் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பரணகம ஆணைக்குழு அமர்வுகளை நடத்தியிருந்தபோது காணாமல்போனோரது உறவினர்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.