வெளிநாட்டு கடன்களை மீள் செலுத்தாமை தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கு தொடரக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது – பந்துல

150 0

சர்வதேச நாணயத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டால் தற்போதுள்ளதை விட பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். வெளிநாட்டு கடன்களை மீள் செலுத்தாமை தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கு தொடரக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படுகிறது.

எனவே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதே எமது இலக்காகும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுதந்திரத்தின் பின் முதன் முறையாக வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த முடியாத நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையின் போது நாட்டுக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கு தொடரக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படுகிறது. எனவே தான் இது குறித்த சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கு சர்வதேச நிறுவனங்களை நாடியிருக்கின்றோம்.

இவ்வாறான நிலைமைக்கு மத்தியிலேயே சர்வதேச நாணய நிதியக்குழு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. இவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை எனில் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதார நெருக்கடி எரிபொருள் இறக்குமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் இன்றி எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே இந்த நெருக்கடி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் தொடர்ந்தும் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றார்.

எம்மால் விடுக்கப்படும் கடன் கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் ஒரு எரிபொருளையோ அல்லது சமையல் எரிவாயுவையோ பெற்றுக் கொள்ள முடியாது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.