சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் ரஞ்சித் கொலை வழக்கு : சர்பயா விடுதலை

172 0

சப்ரகமுவ மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரஞ்சித் நந்தசேன மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தரை சுட்டுக்கொலை செய்து வாகனம் ஒன்றுக்குள் சடலங்களை இட்டு தீ வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குறித்த மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் உறுப்பினர் சர்பயா எனும் அசித சமந்த முகந்திரம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இது தொடர்பிலான தீர்ப்பை நேற்று (20)அறித்தார். குறித்த சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளை முறையாக முன்னெடுக்க பொலிஸார் தவறியுள்ளதாகவும், அக்கறையின்றி அவர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் ஊடாக தெளிவாவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும், நம்பிக்கையற்றவை என சுட்டிக்காட்டி தீர்ப்பை அறிவித்தார்.

அத்துடன் வழக்கு தொடுநர் தரப்பால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சட்டவைத்திய அதிகாரியின் சாட்சியத்தையும், நம்பிக்கையற்றது என நீதிபதி அறிவித்தார்.

அதன்படியே அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து வழக்கு தொடுநர் தரப்பு பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை ; சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க தவறியுள்ளதாக நீதிபதி அறிவித்து அவரை விடுதலை செய்தார்.

1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி கலவானை பகுதியில் அப்போதைய சப்ரகமுவ மாகாண சபையின் உறுப்பினர் ரஞ்சித் நந்தசேன, அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தரான தீபால் குணசிங்க ஆகியோரை சுட்டுக்கொலை செய்து அவர்களது சடலங்களை வாகனத்தில் வைத்து எரித்ததாக சட்டமாதிபரால் சர்பயா எனும் அசித முகந்திரம் என்பவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.