பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் புகைப்படம் எடுத்த பொறுப்பதிகாரி ; அடையாள அணிவகுப்பை இரத்து செய்தார் நீதிவான்

183 0

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் வைத்து ; தனது கையடக்கத் தொலைபேசியில் கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி புகைப்படம் எடுத்தமையை மையப்படுத்தி, ;சந்தேக நபர் ஒருவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் கோரிக்கையை கோட்டை நீதிவான் திலிண கமகே நிராகரித்தார்.

நேற்று (20) ஜனாதிபதி செயலகம் அருகேயான ஆர்ப்பாட்டத்தின் போது 21 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்

இதன்போது அங்கு வைத்து அவர்களை பொலிஸார் புகைப்படம், வீடியோ எடுத்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் விடயங்களை முன் வைத்தார்.

இந்நிலையில் அவ்வாறு கைது செய்யப்பட்ட 21 பேரில் அடங்கும் ரொஷான் அலி தெனிஷ் அலி என்பவரை கடந்த 9 ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்ட சம்பவம் ஒன்றினை மையப்படுத்தி பிரிதொரு வழக்கில் ; அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் விதமாக விளக்கமறியலில் வைக்க பொலிஸார் நேற்று மன்றில் கோரினர். அவ்வழக்கில் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டு உள்ளதாக பொலிஸார் கூறினர்.

எனினும் இதன்போது சந்தேக நபருக்காக வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், குறித்த 9 ஆம் திகதி சம்பவத்தை மையப்படுத்திய வழக்கில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க கோருவது நியாயமற்றது என வாதங்களை முன் வைத்தார்.

அடையாள அணிவகுப்பில் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளவர் கோட்டை பொலிஸ் நிலைய சார்ஜன் பிரேமரத்ன என சுட்டிக்காட்டிய அவர் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பேலியகொடை பொலிஸ் நிலையம் சென்று சந்தேக நபர்களை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ள நிலையில் அடையாள அணிவகுப்பு கோரிக்கை நியாயமற்றது என அவர் வாதிட்டார்

இதன்போது திறந்த மன்றில் நீதிவான், கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி அவ்வாறு புகைப்படம் எடுத்துள்ளாரா என வினவிய போது, மன்றில் ஆஜரான உதவி பொலிஸ் அத்தியட்சர் தில்ருக் அதனை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் அடையாள அணிவகுப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிவான், அவ்வழக்கிலும் சந்தேக நபருக்கு பிணையளித்தார்.