கிளிநொச்சியில் இருந்து கோணாவில் வழியாக அக்கராயன் கிழக்கு வரை நீர்க் குழாய்கள்!

135 0

கிளிநொச்சி – அக்கராயன் கிராம அலுவலர் பிரிவுக்கு இரணைமடு குளத்தின் நீர் விரைவாக குடிநீராக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கராயன் பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

கிளிநொச்சியில் இருந்து கோணாவில் வழியாக அக்கராயன் கிழக்கு வரை தற்போது நீர்க் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டு மீள் குடியேற்றத்தின் பின்னர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் குடிநீர்த் திட்டம் ஒன்று  அக்கராயனில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

450 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கென தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலம் தற்போது 196 குடும்பங்களுக்கே இரு மணித்தியாலங்களில் குடிநீரினைப் பெற வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

கிளிநொச்சியில் இருந்து அக்கராயனுக்கு குடிநீர் வழங்கப்படுமானால் அக்கராயன் பிரதேச வைத்தியசாலை,  அக்கராயன் மகா வித்தியாலயம், அக்கராயன் ஆரம்ப வித்தியாலயம் ஆகியவற்றிற்கும் குடிநீர்த் தேவைப்படுகின்ற குடும்பங்களுக்கும் 24 மணித்தியாலயம் குடிநீர் கிடைக்கக் கூடிய நிலைமை உருவாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் வறட்சி ஏற்படுகின்ற போது குடிநீர் நெருக்கடியினை எதிர்கொள்கின்ற கிராமங்களில் ஒன்றாக அக்கராயன் கிராம அலுவலர் பிரிவு காணப்படுகின்றது.

கிளிநொச்சியில் இருந்து வருகின்ற குடிநீரினை அக்கராயன் பிரதேச வைத்தியசாலையின் நீர்த்தாங்கி, கெங்காதரன் குடியிருப்பில் வடமாகாண சபையினால் அமைக்கப்பட்டு செயலிழந்து உள்ள நீர்த்தாங்கி, அக்கராயன் மகா வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள கிராமிய குடிநீர் வழங்கல் திட்டத்தின் நீர்த்தாங்கி என்பவற்றில் குடிநீரினை சேமித்து வைக்கக் கூடிய நிலைமை உள்ளது.

இரணைமடுக் குளத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு அக்கராயன் வரை குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள கிராமங்களில் ஒன்றான அக்கராயனில் வாழ்கின்ற மக்கள் 24 மணித்தியாலம் குடிநீரினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமையினை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தற்போது உருவாக்கி வருகின்றது.

அக்கராயன் கிராம அலுவலர் பிரிவில் தற்போது 750 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் உப நகரமான அக்கராயன் எதிர்காலத்தில் தனிப் பிரதேச செயலகம், தனிப் பிரதேச சபை என்பன உருவாக உள்ள நிலையில் பொது மக்கள், மாணவர்கள் எல்லோருக்கும் நன்மை அளிக்கும் வகையில் இரணைமடுக் குளத்தின் நீர் குடிநீராக கிடைக்க இருப்பது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை உருவாக்கி உள்ளது. (