ஒற்றை தலைமை விவகாரம்: ஓ.பி.எஸ். போடும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி அதிரடி வியூகம்

161 0

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு அ.தி.மு.க.வின் வேகம் குறைந்துவிட்டது என்று பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வில் உள்ள இரட்டை தலைமை முறை தான் இதற்கு காரணம் என்பது மக்கள் மனதில் பொதுவான எண்ணமாக உள்ளது. முக்கிய பிரச்சினைகளில் முடிவுகள் எடுக்க தாமதம் ஏற்படுவதால் இரட்டை தலைமையை மாற்றிவிட்டு ஒரே தலைமை யின் கீழ் அ.தி.மு.க.வை கொண்டுவர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஒற்றை தலைமையை வருகிற 23-ந்தேதி நடக்கும் பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக உள்ளனர்.

ஆனால் ஒற்றை தலைமை வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி வருகிறார். கடந்த 5 நாட்களாக நடந்து வரும் சர்ச்சை இன்று 6-வது நாளாக நீடித்தது. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இன்று மதியம் வரை சமரசம் ஏற்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 6-வது நாளாக இன்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னையில் உள்ள தங்களது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளின் தலைவர்கள் சாரை சாரையாக வந்தனர். தேனி மாவட்ட பொறுப்பாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை உறுதிபடுத்தும் வகையில் இன்று அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். இதுஒருபுறமிருக்க ஓ.பன்னீர்செல்வத்தை எப்படியாவது சமரசம் செய்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

இதற்காக இன்று காலை செங்கோட்டையன், தம்பிதுரையை தொடர்ந்து மேலும் சிலர் ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்றனர். ஆனால் சுமூக முடிவு எட்டப்பட வில்லை. ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவில் மிகவும் உறுதியாக இருக்கிறார். ஓ.பன்னீர் செல்வம் சமரசம் ஆகவில்லை என்பதை மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். அதை கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி உடனடியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கினார்.

அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒற்றை தலைமை விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி நீண்டநேரம் மூத்த தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஒற்றை தலைமை முடிவை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதை எதிர் கொள்வது என்பது பற்றியும் ஆலோசனை செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக பிரச்சினை செய்தால் அது செல்லுபடி ஆகுமா என்றும் விவாதித்தனர்.