இவ்வாண்டுக்கான தேசிய பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த

183 0

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாரம் கல்வி செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.  இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை , புலமைப்பரிசில் மற்றும் சாதாரண தர பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றை ஒக்டோபர் அல்லது நவம்பரில் நடத்துவதற்கும் , டிசம்பரில் இடம்பெற வேண்டிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகளை 2023 பெப்ரவரியில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஏற்கனவே திட்டமிட்ட படி பாடசாலை செயற்பாடுகளை தொடர்ந்தும் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதைக் கருத்திக் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளில் போக்குவரத்து சிக்கல் மிகக் குறைவாகும். எனவே அவ்வாறான பாடசாலைகளை நடத்திச் செல்வதில் சிக்கல் ஏற்படாது என்று எதிர்பார்க்கின்றோம்.

எனினும் நகர்புற பாடசாலைகளில் அவ்வாறான நிலைமை இல்லை. எனவே அவற்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக இணையவழி கற்பித்தலை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறு இணையவழி கற்பித்தலை முன்னெடுப்பதைக் கருத்திற் கொண்டு இவ்வாரம் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாதிருக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்த மீளாய்வு மீண்டும் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதன் போது குறித்த வாரத்தில் கல்வி செயற்பாடுகள் இடம்பெற்ற முறைமை தொடர்பில் அறிக்கைகள் பெறப்பட்டு அவை மதிப்பீடு செய்யப்பட்டு அடுத்த வாரம் குறித்து தீர்மானிக்கப்படும்.

அத்தோடு கல்விக்காக கொவிட் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி சேவைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மற்றும் டிசம்பரில் வழங்கப்படும் தவணை விடுமுறையை மட்டுப்படுத்தி பாடசாலைகளை நடத்தி பாடப்பரப்புக்களை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கொவிட் காலத்திலிருந்து தரம் 1 முதல் 5 வரையான ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பாடநூல்கள் உள்ளிட்ட கல்வித்துறை சார் அச்சுக்கு தேவையான காகிதங்கள் அல்லது கடதாசிகள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

அடுத்த வருடத்திற்கான சீருடையில் ஒரு தொகுதியை வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து கல்வி செயற்பாடுகளை வழமை போன்று முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மேலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் என்பவற்றை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் அவற்றுக்கு பொறுப்பான உயர் அதிகாரிகள் தீர்மானிக்க முடியும். இவ்வாரம் பாடசாலைகள் மூடப்படும் வாரமாகவே கருதப்படும். எனவே ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை எனில் அது அவர்களது விடுமுறையாகக் கருதப்பட மாட்டாது என்றார்.