2 நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

104 0

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் சி.வி.எம். அண்ணாமலை கொள்ளு பேரன் தமிழ் திரையன் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைப்பதாக இருந்தது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்றார்.

இதே போல் இன்று சென்னை டி.டி.கே. சாலை மியூசிக் அகாடமியில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருந்ததாகவும் அதனால் வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதே போல் நாளை (21-ந்தேதி) ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வதாக இருந்தது. அந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் தனியார் ஆஸ்பத்திரி திறப்பு விழா, வேலூர் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் 3 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு 3 மாவட்டங்களிலும் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டிருந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க. நிர்வாகிகள் தயார் நிலையில் இருந்தனர்.

தொண்டர்களும், உற்சாகமாக இருந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை மற்றும் நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவரது வருகை குறித்து பின்னர் தேதி அறிவிக்கப்படும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.