அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் அவசர அழைப்பு- நாளை டெல்லியில் இருக்க உத்தரவு

182 0

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தியை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 3 நாட்கள் விசாரணை நடந்தது. அந்த 3 நாட்களும் டெல்லி உள்பட அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள், கட்சியின் முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரை டெல்லி மேலிடம் அவசரமாக அழைத்துள்ளது. நாளை (19-ந்தேதி) டெல்லியில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை ராகுல்காந்தியின் பிறந்தநாள். சோனியாகாந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பது, ராகுலிடம் விசாரணை நடைபெறுவது போன்ற காரணங்களால் இந்த ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை தவிர்த்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை ஆகியோர் இன்று டெல்லி செல்கிறார்கள். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்குழு முன்பு ராகுல் ஆஜர் ஆகிறார். எனவே அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கலாம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள அக்னிபாத் திட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.