ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கைப்பிரதிநிதிகள் வலியுறுத்தியதென்ன?

192 0

சீனா என்பது இறைமையுடைய ஓர் தனித்தேசம் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ள இலங்கைப்பிரதிநிதிகள், சீனாவின் உள்ளக விவகாரங்களில் அநாவசிய தலையீடுகளை மேற்கொள்ளவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட 60/251, 48/141 ஆகிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும்போது மனித உரிமைகள் பேரவையும், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமும் பக்கச்சார்பின்மை, சர்வதேசத்துடனான கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றின் அடிப்படையில் செயற்படவேண்டியது அவசியமாகும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், சீனா தொடர்பில் உரையாற்றுகையிலேயே இலங்கையின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் சின்ஜியாங் உய்குர் பிராந்தியம் உள்ளடங்லாக சீனாவிற்கு மேற்கொண்ட விஜயத்தைப் பாராட்டிய இலங்கைப் பிரதிநிதிகள், சீனாவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் பரஸ்பர பரிமாற்றல் அடிப்படையில் இணைந்து செயற்பட்டுவருவதை வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனத்தின் 2 ஆம் உறுப்புரையின் பிரகாரம் நாடொன்றின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கவேண்டியது அவசியம் என்பதுடன், தன்னிச்சையான தலையீடுகள் தவிர்க்கப்படவேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், சீனா இறைமையுடைய ஓர் தனித்தேசம் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதுடன் அது தொடர்ந்தும் பேணப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்
<p>அதுமாத்திரமன்றி நாடொன்றின் விருப்பம் மற்றும் ஒத்துழைப்புழைப்புடன் கூடியதாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது.