இலங்கைக்கு இனி எரிபொருள் கப்பல் வராது என்பது போலி செய்தி ; வலு சக்தி அமைச்சர்

158 0

இலங்கைக்கு எரிபொருளுடன் நேற்றைய தினம் வருகை தந்துள்ளது இறுதி கப்பலாகும் என்றும், இதன் பின்னர் எரிபொருள் கப்பல் வராது என்றும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். நேற்று நாட்டை வந்தடைந்த கப்பல் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் வந்த இறுதி கப்பலாகும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை (நேற்றுவரை) வருகை தந்த சகல எரிபொருள் கப்பல்களும் இந்திய கடன் திட்டத்தின் கீழ் வந்தவையாகும். முதற்கட்டமாக 500 மில்லியன் டொலரும் பின்னர் இரண்டாம் கட்டமாக 200 மில்லியன் டொலர் கடன் திட்டம் எரிபொருள் இறக்குமதிக்காக வழங்கப்பட்டது.

அதற்கமைய நேற்று வருகை தந்த கப்பலில் காணப்பட்ட எரிபொருளுடன் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகையைக் கொண்டு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை முகாமைத்துவம் செய்ய முடியும்.

தற்போது எமக்கு கடனுக்கு எரிபொருளை வழங்குவதற்கு ஏனைய நாடுகள் தயக்கம் காண்பிக்கின்றன. ரஷ்ய தூதுவர் இவ்விடயத்தில் தலையிட்டு உதவ முற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பெற்றோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்வதற்கு இரு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அவற்றுக்கான கடன் கடிதம் மத்திய வங்கியினால் விடுக்கப்பட்டால் அடுத்து எரிபொருள் கப்பல் வருகை தரும் தினத்தைக் குறிப்பிட முடியும்.

எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மசகு எண்ணெய் கப்பல் நாட்டுக்கு வருகை தரவுள்ளது. எவ்வாறிருப்பினும் போதுமானளவு மசகு எண்ணெய் கிடைக்கப் பெறும் வரை மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே சுத்திகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

நாட்டுக்கு வருகை தரும் ஒரு கப்பலில் 10 நாட்களுக்கு தேவையான எரிபொருளே காணப்படும். ஆனால் தற்போது சிலர் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக ஒரு மாத்திற்கு தேவையான எரிபொருளை பதுக்கி வைக்கின்றனர். இவ்வாறான பதுக்கல் நடவடிக்கைகள் குறைவடையும் வரை எரிபொருளை வரிசைகளைக் குறைக்க முடியாது.