இலங்கைக்கு 6 மில்லியன் டொலர்களை வழங்கவிருப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

155 0

பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்காக 6 மில்லியன் டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவிருப்பதாக நேற்று (16) அறிவித்துள்ளது.

இந்த நிதியுதவி சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாக பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பொருளாதார மற்றும் நிதி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு உதவும் என்று இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான அர்ப்பணிப்பான கடப்பாட்டை அமெரிக்கா கொண்டிருக்கின்றது.

இலங்கையின் நீண்டகால அபிவிருத்திப்பங்காளி என்ற ரீதியில் இலங்கையில் நிலையான அபிவிருத்தி மற்றும் சிறந்த அரசநிர்வாகம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான அனைத்துவித முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும்’ என்று அந்நாட்டுத்தூதுவர் ஜுலி சங் உறுதியளித்துள்ளார்.

இந்த நிதியுதவியின் ஒரு பகுதி சிறியளவிலான விவசாய நடவடிக்கைகள், தொடர்ந்து உயர்வான வறுமைக்கு முகங்கொடுத்திருக்கும் சிறிய வணிகமுயற்சிகள் மற்றும் தற்போதைய நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள தரப்புக்கள் ஆகியவற்றுக்கு உதவும் நோக்கில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக ஒன்றிணைவு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்திட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது.

அத்தோடு அரசதுறை வினைத்திறனான முறையில் செயற்படுவதற்கும், வர்த்தகம், தேசிய செலவினங்கள் மற்றும் வருமானம் ஆகியவற்றை உரியவாறு நிர்வகிப்பதற்கான வளங்களை சீரமைத்தல் ஆகியவற்றுக்கும் இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.