சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்ததும் இலங்கையில் அமெரிக்க முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்

167 0

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றுடனான ஒருங்கிணைவின்கீழ் இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்றத்தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்திருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே பிளின்கென், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் அமெரிக்காவின் முதலீடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே பிளின்கென் ஆகியோருக்கு இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைவரம் குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் எடுத்துரைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இவ்வாறானதொரு சூழ்நிலையில் இருநாடுகளும் மிகநெருக்கமாக ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் அமெரிக்காவின் முதலீடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கான ஆதரவை வழங்குவதாக அன்ரனி பிளின்கென் தன்னிடம் உறுதியளித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இக்கலந்துரையாடல் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாகக் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே பிளின்கென் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்

இன்று இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சிறப்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் மிகவும் சவாலான தற்போதைய காலகட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கின்றது’ என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.