தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் இன்று முகூர்த்த நாளாக இருந்ததால் வெளியூர் பயணம் அதிகமாக இருந்தது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்ற பஸ், ரெயில்கள் எல்லாம் நிரம்பி விட்டன. ஆம்னி பஸ்களிலும் அனைத்து இடங்களும் நிரம்பின. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2200 அரசு பஸ்கள் தவிர கூடுதலாக 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதிகாலை 2 மணி வரை வெளியூருக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன. அரசு பஸ்களில் 1.5 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். ஆம்னி பஸ்களில் சுமார் 50 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
இது தவிர எழும்பூரில் இருந்து இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் 25 ஆயிரம் பேரும், சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட்ட ரெயில்களில் இருந்து ஒரு லட்சம்பேரும் பயணித்தனர். அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் முழு அளவில் நிரம்பின. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பஸ், ரெயில்களில் ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். ரெயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டமாக குவிந்து இருந்தனர்.
சென்னையில் இருந்து பொதுமக்கள் வெளியூர் சென்றது போல பல்வேறு பகுதியில் இருந்தும் சென்னைக்கு திரும்பி வந்தனர். நேற்று பகலில் இயக்கப்பட்ட ரெயில்கள் மூலமாகவும், இரவில் இயக்கப்பட்ட பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலமாக வும் இதே அளவிலான மக்கள் சென்னை திரும்பி உள்ளனர். இது தவிர கார்களிலும் வெளியூர்களில் இருந்து மக்கள் இரவு, பகலாக வரத் தொடங்கினர். பகல் நேரத்தில் பெரும்பாலானவர்கள் சொந்த மற்றும் வாடகை கார்களில் பயணம் செய்தனர்.
சென்னையில் நிறைய திருமணங்கள், சுப காரியங்கள் நேற்று இரவு நடைபெற்றதால் இரவு 11 மணிவரை சாலையில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் வாகன நெரிசலும் இருந்தன. கோயம்பேடு, மதுரவாயல், வடபழனி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையிலும் வாகன நெருக்கடி காணப்பட்டது.