தமிழக சட்டசபை 21-ம் தேதி கூடுகிறது

482 0

201607141039534284_Budget-session-of-Tamil-Nadu-Assembly-will-start-july-21_SECVPFதமிழகத்தில் கடந்த மே மாதம் 16-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதைத்தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் 16ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் தமிழக கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். இதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து 4 நாட்கள் விவாதம் நடைபெற்று, பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் 2016-17ஆம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 21-7-2016ஆம் நாள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 11 மணிக்கு 2016-2017ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தபின்னர், அதன் மீதான விவாதம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும். இந்த கூட்டத்தொடர் ஒரு மாதம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் எதிர்நோக்கி உள்ள பிரச்சனைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இந்த கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.