ஸ்ரீ லங்கன் விமான சேவை தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தல் – கோப் குழுவின் அறிக்கையை செயற்படுத்த கோரிக்கை

191 0

அரச செயலொழுங்கிற்கு பெரும் நிதி சுமையாக உள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கையை செயற்படுத்த பாராளுமன்றம் விசேட அவதானம் செலுத்த வேண்டும். தேசியபொருளாதாரத்திற்கு இந்நிறுவனம் பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கிறது என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கோப் குழுவின் இரண்டாம் அறிக்கையினை சபையில் சமர்ப்பித்ததை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கோப் குழுவின் இரண்டாவது அறிக்கையில் கால்பந்து சம்மேளனம்,ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்,தேசிய வீடமைப்பு அதிகார சபை,தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம்,இலங்கை போக்குவரத்து சபை ஆகிய அரச நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கோப் குழு விசாரணையில்  ஸ்ரீ லங்கன் விமான சேவை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவை அர செயலொழுங்கிற்கு பெரும் சுமையாக உள்ளதுடன்,தேசிய பொருளாதாரத்திற்கு பரியஅச்சுறுத்தலாக உள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள  விசேட மூன்று உப குழுக்கள் நியமிக்கப்பட்டன  நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கை, நிதி திட்டமிடல் மற்றும் எதிர்கால வியாபார நடவடிக்கைகள் உள்ளிட்ட மூன்றுவிடயங்கள்  இந்த விசாரணைக்குள் உட்படுத்தப்பட்டன.

இந்த மூன்று விசேட உபகுழுககள் ஊடாக ஸ்ரீ லங்கன் விமான சேவை ; நிறுவனம் தொடர்பில் பாராளுமன்றம் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தேசியபொருளாதாரத்திற்கு  பிரயோகிக்கும் அழுத்தம் தொடர்பில்   பாராளுமன்றம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.