நீதிமன்றமும் தாக்குதல்தாரிகள் பக்கம் உள்ளதா என்று எண்ணத் தோன்றுகிறது – சரத் வீரசேகர

157 0

மனித உரிமைகள் என்ற பெயரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பயந்துள்ளதால் வன்முறையாளர்கள் சட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள். நீதிமன்றமும் தாக்குதல்தாரிகள் பக்கம் உள்ளதா என்று எண்ண  தோன்றுகிறது என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (10) காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல தொடர்பான அனுதாப பிரேரணை மீதான விவாதத்தின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

நாட்டில் அராஜகம்  தலைத்தூக்கியுள்ளமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்தகோரலவின் படுகொலையுடன் தொடர்புடையவர்களுக்கு  நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும்  ,அத்துடன் மே 9 வன்முறை சம்பவத்தை வழிநடத்தியவர்களுக்கும் தண்டனை கிடைக்கப்பெற வேண்டும்.

கடந்த மே மாதம்09ஆம் திகதி நாட்டில் பல்வேறு  பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் நாட்டிற்கு கரும் புள்ளியாக உள்ளது.

வன்முறை சம்பவத்தின் போது இராணுவத்தினரும்,பொலிஸாரும் ; வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.தாக்குதல்காரர்கள் பகிரங்கமான முறையில் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுப்பட்டனர்.

நாடுதழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந் து மேல் மாகாண ; சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது பகிரங்கமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது இவ்வாறான தன்மை உலகில் வேறெங்கும் காண முடியாது.

வன்முறை சம்பவங்களின் போது வீடுகளுக்கு தீ வைத்து,தாக்குதல்களை மேற்கொண்டவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

தாக்குதல்தாரிகள் பக்கம் நீதிமன்றம் உள்ளதா என்று வினவ தோன்றுகிறது.தாக்குதல்தாரர்களுக்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்றில் முன்னிலையாகி அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்றது.நாட்டில் எவ்வாறான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை அறிய முடியவில்லை.

ஜனநாயக ரீதியிலான போராட்டம் சிறந்ததாக காணப்பட வேண்டும்.நாட்டில் தற்போது ஜனநாயக ரீதியிலான போராட்டம் என்ற பெயரில் முறையற்ற வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் நாட்டில் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமாயின் ஒரு மாதத்திற்கு முன்னர்  உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும்,ஆனால் இங்கு எவர் வேண்டுமானாலும் எந்நேரத்திலும் போராட்டத்தில் ஈடுப்படலாம்.

மனித உரிமைகள் என்ற பெயரில் ஐக்கிய நாடுகள் சபை,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயந்துள்ளதால் வன்முறையில் ஈடுபடுபவர்கள் சட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

ஜனாதிபதியின் செயலகம் முற்றுகையிடப்பட்டடுள்ளதை தடுக்க முடியாமல் இருப்பது ஜனநாயகம் அல்ல பலவீனம் என்றே குறிப்பிட வேண்டும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் படுகொலை தொடர்பிலான விசாரணை சிறப்பு மூன்று நீதியரசர்கள் அடங்கிய  விசாரணைகள் துரிதகரமான முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.