மே 9 தாக்குதலுக்குப் பின்னால் பெளத்த விகாரைகளும் கிறிஸ்தவ தேவாலயங்களுமே இருந்துள்ளன : பிரசன்ன ரணதுங்க

179 0

மே மாதம் இடம்பெற்ற கலவரத்துக்குப்  பின்னால் பெளத்த விகாரைகளும் கிறிஸ்தவ ஆலயங்களுமே இருந்துள்ளன. இந்த நாடு சிங்கள பெளத்த நாடு என்று கூறுவதற்கு மனமில்லை. ஏனெனில் எனது வீட்டுக்கு தாக்குதல் மேற்கொண்வர்  தேரர் ஒருவராவார்  என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காலம் சென்ற அமரகீர்த்தி அத்துகோரலின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது நாடு சிங்கள பெளத்த நாடு என்று கூறுவதற்கு மனம் இல்லை. ஏனெனில் கடந்த மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறை, மிலேச்சத்தனமான நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவம் வழங்கியது கிராமங்களில் இருக்கும் எமது தேரர்களாகும்.

இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எனது வீட்டுக்கு தாக்குதல் மேற்கொள்ளவந்ததும் பேராசிரியர் தேரர் ஒருவராவார் . தீ வைத்ததும் தேரர் ஒருவராவார் .

தேரர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதன் மூலம் இந்த நாட்டில் ஒழுக்கம் ஏற்படுமா என்பது சந்தேகமாகும். இந்த நிலை தொடர்ந்தால்தேரர்களுக்கு வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலைமை ஏற்படும்.

பண்டாரநாயக்கவின் கொலைக்குப் பின்னரே அரசியல் வாதிகள் கொலை செய்யப்படும் நிலை நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. அமரகீர்த்தி அத்துகோரலவை கொலை செய்தது சாதாரண மனிதர்கள் அல்ல.

அவர்கள் போதை பயன்படுத்துபவர்கள். அவர்களுக்கு வாழ்க்கை ஒன்று இல்லை. இதனுடன் சம்பந்தப்பட்டவர்களை தூக்கிலிட்டு  கொலை செய்யவேண்டும் என நிட்டம்புவ பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று இந்த சம்பவ தினம் சாேபித்த தேரர், கார்தினால் ஆகியோர் அங்கி இருந்து கொண்டு இவர்களுக்கு அடியுங்கள் என்றே தெரிவித்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் இதனை தெரிவிக்கவில்லையா? இந்த சம்பவம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் அல்ல.

31ஆம் திகதி ஜனாதிபதியின் வீட்டுக்கு அடித்தார்கள். அங்கு தீ வைத்தார்கள். அப்பாவிகளின் வீடுகளுக்கு தீ வைத்தார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு சென்று வீரர்கள் போலே அவர்களை வெளியில் எடுத்தனர்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தும்போது பொலிஸார் என்ன செய்தார்கள். சில சட்டத்தரணிகள் இதனை நியாயப்படுத்தியிருந்தனர். சட்டத்தரணிகளின் ஆதரவு இருப்பதாலே 9ஆம் திகதி அவர்கள் சட்டத்தை கையில் எடுத்தனர்.

மேலும் சில கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிக்கச்செய்து, மக்களை ஒன்று திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கர்தினால் விசாரணை நடத்தவேண்டும்.

அதனால் இந்த தாக்குதலின் பின்னணியில் விகாரைகள் மாத்திரம் அல்ல, கிறிஸ்தவ ஆலயங்களும் இருக்கின்றன. நான் இவ்வாறு தெரிவிப்பதால் எனக்கு எதிராக செயற்படுவார்கள்.

அதுதொடர்பில் நான் அச்சப்படவில்லை. ஏனெனில் நான் இழக்கவேண்டிய அனைத்தையும் இழந்துள்ளேன். இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றார்.