பாராளுமன்ற கோப் மற்றும் கோபா குழு விசாரணையில் வெளிப்படும் ஊழல் மோசடி காரர்கள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சியிள் பிரதான கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாராளுமன்ற குழு அறையில் இடம்பெறும் கோப் மற்றும் கோபா குழுக்களின் மூலம் தீர்மானங்களை நாங்கள் பாராளுமன்றத்தில் விவாதித்து, பின்னர் அதனை விட்டு விடுகின்றோம்.
அதனால் கடந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது, நான் பிரைேரணை ஒன்றை முன்வைத்தேன், அதாவது கோப், கோபா குழுவின் போது வெளிப்படும் நிதி மோசடி தொடர்பாக உடனடியாக சட்டமா அதிபருக்கு அறிவிக்கவேண்டும் என தீர்மானித்தோம்.
எனது யோசனைக்கு சபாநாயகர், ஆளும் கட்சியின் அமைப்பாளர் ஆகியோர் இணக்கம் தெரிவித்திருந்தனர். ஏனெனில் நான் பாராளுமன்றத்துக்கு வந்து, 30 வருடமாகின்றபோதும், கோப் குழு விசாரணையில் வெளிப்படும் விடயங்களை விவாததித்து விட்டு செல்வதை மாத்திரமே காணமுடியகிறது . அதனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்
அதனைத்தொடர்ந்து சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில், கோப், கோபா குழுக்களின் அதிகாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
அதன் பிரகாரம் எதிர்க்கட்சி பிரதம கொரடா தெரிவித்த பிரகாரம், சட்டமா அதிபருக்கு அறிவிக்க முடியுமாகும். இதுதொடர்பாக சபாநாயகருடனும் கலந்துரையாடினேன். இதன்போது இதுதொர்பாக நிலையியற் கட்டளையின் திருத்த யோசனையை அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி உறுபபினர் ஜயந்த வீரசிங்க, கோப், கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டார்.
அதற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் தலைமைத்துவம் வகிக்கும் குழுக்கள் அல்லாத வேறு குழுக்களுக்கான தலைவர், அந்த உறுப்பினர்களினாலே தெரிவு செய்யப்படுகின்றார் என்றார்.
அதனை தொடர்ந்து மீண்டும எழுந்த லக்ஷ்மனங கிரியெல்ல, கோப்,கோபா குழுக்களின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கவேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றோம்.
இவ்வாறான குழுக்களின் தலைமை எதிர்க்கட்சிக்கு கொடுப்பதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உசாராகுவார்கள். வெளிநாடுகளிலும் இவ்வாறான குழுக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களே நியமிக்கப்படுகின்றனர். இதனை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து எழுந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த குழுக்கள் தொடர்பாக தயார் படுத்த முன்னாள் சபாநாயகருக்கு தெரிவித்திருக்கின்றோம். அதனால் இதுதொடர்பாக சட்டமூலம் கிடைத்த பின்னர் எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.