ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிடும் கருத்திற்கிடையில் பரஸ்பர வேறுபாடுகள் ; உள்ளன.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்தால் அமெரிக்காவை பகைத்துக்கொள்ள நேரிடும் என பிரதமர் குறிப்பிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து கலந்துரையாடினோம்.
தற்போதைய நிலையில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்தால் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள நேரிடும் என பிரதமர் குறிப்பிட்டார்.
தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.
எரிபொருள்,எரிவாயு மற்றும் உரம் ஆகியவற்றினை பெறுவதில் நாம் பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ள போது ரஷ்யாவிடமிருந்து நாம் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் பல்வேறு தரப்பினர் களிடமிருந்து யோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்தும் யோசனை முன்வைக்கப்பட்டு அடுத்தக்கட்ட தீர்மானம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சபையில் தெரிவித்தார்.