அடிதடி வழக்கில் கைதான கோவை கல்லூரி மாணவர்களுக்கு 100 திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும் என்று நீதிபதி நூதன தண்டனையை வழங்கி உள்ளார்.
கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர், அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை அடித்து உதைத்ததாக காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக காரமடை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரையும் மேட்டுப்பாளையம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
கைதான 3 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதால் நீதிபதி நூதன தண்டனை அளித்து தீர்ப்பு கூறினார்.
நீதிபதி தனது தீர்ப்பில், ‘‘ 3 மாணவர்களும் தினமும் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் பள்ளி தமிழ் ஆசிரியரிடம் 10 திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும். 10 நாட்களுக்கு 10 திருக்குறள் வீதம் மொத்தம் 100 திருக்குறளை ஒப்புவித்த பின்பு தலைமை ஆசிரியர் நீதிமன்றத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.