சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கைகொடுத்துள்ளனர். விவசாய நிலங்களில் இருந்து 300 மோட்டார்கள் மூலம் தினசரி 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கைகொடுத்துள்ளனர். விவசாய நிலங்களில் இருந்து 300 மோட்டார்கள் மூலம் தினசரி 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவுடைய பூண்டி ஏரியின் நீர்மட்டம் 736 மில்லியன் கன அடியாகவும், 881 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவுடைய சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 68 மில்லியன் கன அடியாகவும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவுடைய புழல் ஏரியின் நீர்மட்டம் 313 மில்லியன் கன அடியாகவும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 333 மில்லியன் கன அடியாகவும் குறைந்தது.
கோடை காலம் நெருங்கும் முன்பே வறட்சியின் பிடியில் ஏரிகள் சிக்க தொடங்கி உள்ளதால், சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒருகட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் குடிநீர் வாரிய ஊழியர்கள் இரவு-பகலாக ஈடுபட்டுள்ளனர்.
பூண்டியில் இருந்து புழலுக்கு செல்லும் குழாய் வழித்தடத்தில் அடைப்புகள் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா? என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை நகருக்கு எப்போது எல்லாம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறதோ? அப்போது எல்லாம் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கைகொடுத்து வருகிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் அதிகம் பெய்ததால் ஏரிகள், குளங்கள் முழு கொள்ளளவையும் எட்டி கடல் போன்று காட்சியளித்தது.
இதன் மூலம் 2016-ம் ஆண்டு சென்னை நகரின் குடிநீர் தேவை முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்டது.
ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை பொய்த்துபோனதால் சென்னை நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை நகரில் கோடை காலத்தை சமாளிப்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவானூர், புல்லரம்பாக்கம், கண்டிகை, தாங்கனூர், மோவூர், கீழானூர், மேலானூர், மாகரல், காரணை, கைவண்டூர் உள்பட இடங்களில் 15 எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ள பூண்டி கிணறு மையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களில் இருந்து 300 ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தினந்தோறும் 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் 15 கிணறு மையங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. பின்னர் குழாய் மூலம் புழல் குடிநீர் சுத்திக்கரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்கிருந்து சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.சென்னை நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை பொறுத்து வரும் நாட்களில் விவசாய நிலங்களில் இருந்து கூடுதல் தண்ணீர் பெறப்பட்டு சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.