ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்க சீனா திட்டம்

272 0

விண்ணிலிருந்து செலுத்தித் தாக்கும் திறனுள்ள சிறிய ரக ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய சீனா திட்டமிட்டு வருகிறது.

இந்தத் தகவலை சீன அரசு வெளியிடும் நாளிதழான “சைனா டெய்லி’ வெளியிட்டுள்ளது.

விண்ணிலிருந்து செலுத்தக் கூடிய ஏவுகணைகளை சீன விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
அந்த ஏ.ஆர்.-2 ரக ஏவுகணைகள் சுமார் 20 கிலோ எடையுள்ளவை. ஐந்து கிலோ எடையுள்ள ஏவுகணை போன்ற ஆயுதங்களை சுமந்து செல்லும் விதத்தில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 735 கிலோமீட்டர் வேகத்தில் அவை பறக்கும் திறன் கொண்டவை. எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாக அவை தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்தவை என கூறப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானங்கள் மூலமும் ஹெலிகொப்டர்கள் மூலமும் இந்த ஏவுகணைகளைச் செலுத்த முடியும்.

சி.எச்.- 4 ரகத்தைச் சேர்ந்த ஆளில்லா விமானங்களை ஏற்கெனவே 10 நாடுகளுக்கு சீனா விற்பனை செய்துள்ளது.

இந்த நிலையில், அது போன்ற ஆளில்லா விமானங்கள் சுமந்து செல்லக்கூடிய சிறிய ரக ஏவுகணைகளையும் விற்பனை செய்ய சீன அரசு திட்டமிட்டு வருவதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அந்த வகை ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் திறம்படப் பயன்படுத்தலாம் என்று சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளின் மறைவிடங்கள், வாகனங்களை விண்ணிலிருந்து துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும் எனவும் சீன விண்வெளி ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.