பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு கொரோனா தொற்று..

169 0

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு சன்னா மரின் (வயது 36), உடல் வெப்பநிலை அதிகரித்தது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் லேசான அறிகுறிகளே இருப்பதாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சன்னா மரின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “நேற்று முன்தினம் இரவு எனக்கு உடல் வெப்பநிலை அதிகரித்தது. காலையில் நான் கொரோனா பரிசோதனை செய்தேன்.

அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அறிகுறிகள் லேசானவை மற்றும் நான் நன்றாக உணர்கிறேன். அதிக பயணங்களின் காரணமாக நான் வழக்கமான வீட்டு பரிசோதனைகளை செய்தேன். இந்த வார தொடக்கத்தில் எனது சோதனைகள் எதிர்மறையாக இருந்தன” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பாராளுமன்ற அமர்வில் மரின் கலந்துகொண்டதாகவும், மாலையில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமைச்சரவைக் கட்சிகளின் பாரம்பரிய கோடை கொண்டாட்டத்தை நடத்தினார் என்றும் தேசிய ஒளிபரப்பாளர் தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து பிரதமரின் அட்டவணையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் அவசரச் சட்டச் சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று பிற்பகல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேசிய ஒளிபரப்பாளர் அறிவித்தார்.