தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதற்கு கட்சி பேதமின்றி உழைக்க வேண்டும் – ரிஷாட் பதியுதீன்

288 0

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் இணைந்து உழைக்க வேண்டுமென, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில், இன்று நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இன, மத மற்றும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் சந்தேகப் பார்வைகளைக் களைந்துவிட்டு எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய காலகட்டத்தில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இப்போது சுமூகமாக வாழ்கின்ற போதும் வாழ்வாதாரங்கள் இல்லாதவர்களாக வளங்கள் இல்லாதவர்களாக அத்தியாவசியமான விடயங்களை நிறைவேற்ற முடியாதவர்களாக இருக்கின்றனர்.

இவர்களின் வாழ்க்கைக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

மனிதாபிமான ரீதியில் இவர்களின் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும்.

அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து சமுதாயத்தை முன்னேற்ற வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

இந்த நல்லாட்சியில் பல கட்சிகளைச் சேர்ந்த நல்ல பண்புள்ள அரசியல் தலைவர்கள் பங்காளிகளாக இருக்கின்றனர்.

எனவே, நாட்டை கட்டியெழுப்புவதற்கு இதைவிட ஒரு நல்ல தருணம் கிடைக்காது என ரிசாத் பதியுதீன் இதன்போது குறிப்பிட்டார்.