அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை முன்பு இருந்ததைப் போலவே நடத்த வேண்டும்: ஒபிஎஸ்

154 0

தமிழகத்தில் முன்பு இருந்ததைப் போலவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தது, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியது, தாய்மார்களுக்கு கொடுக்கப்பட்ட அம்மா பரிசுப் பெட்டகத்தை ரத்து செய்தது, அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை முடக்கியது என்ற வரிசையில் தற்போது அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடப்பு கல்வியாண்டு முதல் மூட அரசு முடிவெடுத்துள்ளதாக பத்திரிகைகளில் வெளி வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்’ என்ற பழமொழி தான் என் நினைவிற்கு வருகிறது. அரசுப் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை அதிகளவில் ஈர்க்கும் வண்ண ம், தனியார் கல்லூரிகளுக்கு இணையாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் 2,381 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன்மூலம், ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்காமல் அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர். இந்த நடவடிக்கையின் காரணமாக, பெற்றோர்களின் நிதிச் சுமை பெருமளவு குறைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், பல பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக, வாக்குறுதிகளை நிறைவேற்றாததோடு, நடைமுறையில் மக்களுக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கின்ற திட்டங்களை படிப்படியாக நிறுத்திக் கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் நடந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கூட்டத்தில், இந்த ஆண்டிற்கு ஒன்றாம் வகுப்பு முதல் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டுமென்று தொடக்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டதாகவும், இது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதற்கான முயற்சி என்றும், அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மீண்டும் துவக்கப்பட வேண்டுமென பெற்றோர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்கின்றனர் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.