மத சகிப்புத்தன்மை அவசியம்: நூபுர் சர்மா சர்ச்சைப் பேச்சுக்கு ஐ.நா. எதிர்வினை

216 0

மத சகிப்புத்தன்மை அவசியம். அனைத்து மதங்களும் மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்பதையே நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானே டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். அதனையடுத்து தொழிலதிபர் நவீன் குமார் ஜிண்டாலும் அதேபோன்றதொரு சர்ச்சைக் கருத்தை ட்விட்டரில் வெளியிட்டு பின்னர் நீக்கினர். இந்த இரண்டு விஷயங்களையும் கண்டித்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கண்டன ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலம் கல்வீசு வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டனர்.

ஆனாலும் வளைகுடா நாடுகள், இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் என 15 நாடுகள் நூபுர் சர்மா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமையன்று கண்டனம் தெரிவித்தன.நேற்று (திங்கள் கிழமை) ஈரான், ஈராக், பஹ்ரைன், பாகிஸ்தான், தாலிபான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், லிபியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுவரை மொத்தம் 15 இஸ்லாமிய நாடுகள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

ஐ.நா எதிர்வினை: இந்தச் சூழலில் ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பாகிஸ்தான் நிருபர் ஒருவர், நுபுர் சர்மா சர்ச்சைப் பேச்சும் அதற்கு இஸ்லாமிய நாடுகள் தெரிவித்துள்ள கண்டனம் குறித்து கேள்வி எழுப்பினார்.