பயிற்சி பெற்ற கைத்தறி நெசவாளர்களுக்கு உதவித்தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

201 0

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் “கைத்தறி நெசவு திறன் மேம்பாட்டு பயிற்சி” கைத்தறியில் புதுமை புகுத்துதல் திட்டம் மூலம் மத்திய அரசின் ஜவுளித்துறையின் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு “சமர்த் திட்டம்” என்கிற பெயரில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்கள் அதிகமுள்ள பகுதியான காஞ்சிபுரம், கும்பகோணம், ஈரோடு, பரமக்குடி ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் ஜவுளித்துறையின் சார்பாக, தமிழ்நாடு கைத்தறித்துறை சரக உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி திட்டத்தில் கூட்டுறவு சங்க நெசவாளர்களும், தனியார் நெசவாளர்களும் 40 முதல் 45 நபர்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறும் நெசவாளர்களுக்கு பயிற்சி முகாமில் நாள் ஒன்றுக்கு ரூ.300 வீதம் உதவித் தொகை வழங்குகிறது. இப்பயிற்சி வகுப்பின் மூலம் இதுவரை 1500 கைத்தறி நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை இதுவரை தமிழ்நாடு கைத்தறித்துறை சரக உதவி இயக்குனர் அலுவலகத்தால் வழங்கப்படவில்லை. நெசவாளர்களின் நலன் கருதி இதுவரை பயிற்சிப்பெற்ற கைத்தறி நெசவாளர்களுக்கும், தற்பொழுது பயிற்சி பெறும் நெசவாளர்களுக்கும் உதவித் தொகையை உடனடியாக தமிழக அரசு, தமிழ்நாடு கைத்தறிதுறையின் மூலம் தாமதமில்லாமல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.