மண்சரிவால் 9 குடும்பங்கள் பாதிப்பு

156 0

இரத்தினபுரி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஹப்புகஸ்தென்ன-  வேவல்கெட்டிய கீழ் பிரிவு தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு லயக்குடியிருப்பில் உள்ள 9 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் பாதிக்கப்பட்டு தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும்  1983, 2016ஆம்  ஆண்டுகளில்  அப்பகுதியில்  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அம்மக்கள்  தற்காலிகமாக தோட்ட வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு மீண்டும் மழை நின்றதும் தமது பழைய குடியிருப்புக்கே சென்று வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மே மாதம்  31ஆம் திகதி அங்கு பெய்த அடை மழை காரணமாக, குறித்த லயக்குடியிருப்பு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கைக்குள்ளாகியுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட லயக்குடியிருப்பை பார்வையிட, இரத்தினபுரி பிரதேச செயலாளர், வேவல்வத்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் வருகை தந்த துடன், பாதிக்கப்பட்டவர்களை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.

அத்துடன், சப்ரகமுவ மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளும் இரத்தினபுரி பிரதேச செயலக உதவி செயலாளரும் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்து, பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

எனினும் இவ்வாறு தற்காலிகமாக தங்கியுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க எந்தவொரு அதிகாரியும் முன்வராத நிலையில்,
அத்தோட்ட கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் அத்தோட்ட இளைஞர்களும்  சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப்பொருள்களை வழங்கி வருகின்றனர்.

இதேவேளை இம்முறையாவது தமக்கு பாதுகாப்பான இடங்களில் நிரந்தர வீடுகளை அமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.