தமிழகத்தில் புதிய வகை கொரோனா- 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்

149 0

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பேரறிஞர் அண்ணா பூங்கா வளாகத்தில் நடந்த புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் பி.ஏ.1 மற்றும் பி.ஏ.2 வகை கொரோனா தொற்றுகளில் காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்பு நாவலூர் பகுதியில் ஒரு நபருக்கு பி.ஏ.4 உருமாற்றம் பெற்ற வைரஸ் தொற்று ஏற்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். இந்தநிலையில் நேற்று 150 மாதிரிகள் ஐதராபாத்தில் உள்ள சி.டி.எப்.டி ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் தமிழகத்தில் 4 பேருக்கு பி.ஏ.4 தொற்றும், 8 பேருக்கு உருமாற்றம் பெற்ற பி.ஏ.5 இருப்பது கண்டறியப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட 12 பேரும் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர். யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கொரோனா தொற்று குறைந்து வருகிறது என மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். கொரோனா தொற்று முழுவதுமாக நீங்கும் வரை முக கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும் வேண்டும். அரசின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.