பழனி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

178 0

அறுபடைவீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் விழாக்களில் வைகாசி விசாக திருவிழா பிரசித்திபெற்றதாகும். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா இன்று காலை பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக வேல், மயில் மற்றும் சேவல் உருவம் பொறித்த மஞ்சள்நிறக்கொடி படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதன்பின்பு கொடி படம் மேளதாளங்கள் முழங்க கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தது. அப்போது கோவில் மண்டபத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடத்தப்பட்டது. அதன்பின்பு வேதமந்திரங்கள் முழங்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். அதனைதொடர்ந்து துவாரபாலகர்கள், பரிவார தெய்வங்கள், சுவாமி மற்றும் வாகனங்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 11-ந்தேதி திருக்கல்யாணமும், 12-ம் தேதி வைகாசி விசாக தேரோட்டமும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் இணைஆைணயர் நடராஜன், கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.