நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாமலாக்கப்பட வேண்டும் -அருட்தந்தை சிறில்காமினி

367 0

நாட்டுக்கு பிரயோசனமளிக்கும் அரசியல் அமைப்பு திருத்தம் மேற்ககொள்ளப்படவேண்டும் என்றால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்கப்படவேண்டும்.

என்றாலும் தற்போதைக்கு அதனை செய்ய முடியாத நிலை இருப்பதால் சமர்ப்பிக்க இருக்கும் 21 ஆம் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைகுறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அருடதந்தை சிறில் காமினி தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தம் ஏன் கொண்டுவரப்படவேண்டும் என்ற தொனிபொருளில் மக்கள் பேரவையின் சர்வமத தலைவர்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு 19ஆம் திருத்தத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருந்த ஜனநாயக விடயங்களை 20ஆம் திருத்தம் இல்லாமலாக்கி, தனி ஒரு நபருக்கு கீழ் வரையறை இல்லாத அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன.

அதன் பாதிப்பை தற்போது நாங்கள் அனுபவித்து வருகின்றோம். அதனால் 21ஆம் திருத்தத்தின் தேவை தற்போது உணரப்பட்டு வருகின்றது. அதனால் 20இல் இருக்கும் ஜனநாயக விராேத விடயங்கள், நாட்டுக்கு பொருத்தமில்லாத விடயங்களை இல்லாமலாக்கியே 21 கொண்டுவரப்படவேண்டும்.

அதேபோன்று 19ஆம் திருத்தத்தில் உறுதிப்படுத்தப்பட்டிந்த ஜனநாயக விழுமியங்களை மீண்டும் அரசியலமைப்பு திருத்தத்துக்குள் உள்வாங்கவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் 19ஐ விட குறைந்த, பலவீனமான திருத்தங்களை கொண்டுவர அனுமதிக்க முடியாது. குறிப்பாக 19இல் இருக்கும் இரட்டை பிரஜா உரிமை இருப்பவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது என்ற அத்தியாயத்தை 21இலும் உள்வாங்கவேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி அமைச்சு பதவி வகிக்கும் விடயத்தில், அவர் பாதுகாப்பு அமைச்சு பதவியை மாத்திரம் வகிக்க முடியும். இவ்வாறு இல்லாமல் வேறு அமைச்சுக்களின் நிறுவனங்களை தனக்கு கீழ் வைத்துக்கொள்ள முடியாது.

அமைச்சர்களை மாற்றும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருக்க முடியாது. இந்த திருத்தங்கள் 21இல் உள்வாங்கப்படவேண்டும்

மேலும் சுயாதீன நிறுவனங்களின் மீது ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமலாக்கப்படவேண்டும். குறிப்பாக நீதித்துறைஇ பொலிஸ் திணைக்களம் என்பவற்றில் அரசியல்வாதிகளின் தலையீட்டை இல்லாமலாக்கவேண்டும்.

அப்படியானால்தான் நீதியை நிலைநாட்ட முடியும். எனவே நாட்டுக்கு பிரயோசனமான அரசியல் அமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டுமாக இருந்தால், நிறைவேற்று ஜனாதிபதி முறை முழுமையாக இல்லாமலாக்கப்படவேண்டும்.

என்றாலும் தற்போதுள்ள நிலைமையில் அதனை செய்ய முடியாமல் இருப்பதால் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.