மத்திய வங்கி மீதான அநாவசிய தலையீடுகள் பொருளாதார மீட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் – மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் எச்சரிக்கை

145 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மைக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன, மத்திய வங்கி மீதான எந்தவொரு தலையீடுகளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வலுவிழக்கச்செய்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்றுக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.

ஊழியர்களுக்கான சம்பளக்கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிடவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட கருத்து பல்வேறு கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த நடவடிக்கையானது நீரிழிவு நோயாளிக்கு சீனி அதிகளவில் உள்ள உணவை வழங்குவதைப் போன்றதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் புதிய வரி அறவீட்டு முறைமைகளை பிரதமர் இவ்வாரம் அறிவித்துள்ளமை நம்பிக்கையளிப்பதாக இருப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மத்திய வங்கியின் மீதான அநாவசிய தலையீடுகள், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள்மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது