சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்படும்!

161 0

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதற்கு அவசியமான உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் 4 – 5 வாரங்களுக்குள் ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை எட்டக்கூடியதாக இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆராயும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த அவர், அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்டமாக அவசியமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதை அடிப்படையாகக்கொண்டு எதிர்வரும் 4 – 5 வாரங்களுக்குள் சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுக்கும் மத்திய வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இருப்பினும் இது இலங்கைக்கான உதவி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபை வெகுவிரைவில் அனுமதியளிப்பதை நோக்கி நகர்த்திச்செல்லாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அத்தகைய நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வது அவசியமாகும் என்று தெரிவித்துள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஊழியர்மட்ட இணக்கப்பாடு எட்டப்படுவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படும் என்னும், அதன் விளைவாக நாட்டின் நிதிச்சந்தையில் முதலீடுகளை அதிகரித்துக்கொள்ளமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ,