21 ஆவது திருத்தத்திற்கு உள்ள தடையினை வெற்றிக்கொள்ள சகல மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – நீதி அமைச்சர்

255 0

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடையினை வெற்றிக்கொள்ள சகல மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

புதிய அரசியலமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ முஸ்லிம் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்

அரசியமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தொடர்பில் முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிகள் 4 யோசனைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.

உத்தேச அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தொடர்பில் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸவிற்கும்,முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரநிதிகளுக்கும் ,பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளின் பிரநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நீதியமைச்சில் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்ததை செயற்படுத்துவதன் அவசியம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையினை நீதியமைச்சர் இதன்போது பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பிலான தனது யோசனைகளை சிவில் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நீதியமைச்சரிடம் முன்வைத்தனர்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்கிக்கொள்வதற்கு மக்களின் ஆதரவு முக்கியமானதாகும் என்பதால் சகல மக்களும் 21ஆவது திருத்தம் குறித்து அவதானம் செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதியமைச்சர் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் உருவாக்கப்படும். அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 21 ஆது திருத்தம் நிறைவாக நிறைவேற்றிக்கொள்ளப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு,பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றின் சுயாதீனத்தன்மை மட்டுப்படுத்தப்பட்டதுடன்,தேசிய பெறுகை ஆணைக்குழு,கணக்காளர் நாயகம் ஆணைக்குழு இரத்துச் செய்யப்பட்டன.

21 ஆவது திருத்தம் ஊடாக ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்டு தேசிய பெறுகை மற்றும் கணக்காளர் நாயகம ஆகிய ஆணைக்குழுக்கள் மீள ஸ்தாபிக்கப்படும் என நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சினை மாத்திரம் ஜனாதிபதி வகித்தல்,அமைச்சரவை நியமனத்தின் போது ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையை பெறல், பிரதமரை நீக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியிடமிருந்து நீக்கி அதனை பாராளுமன்ற பெரும்பான்மைக்கு உட்படுத்தல், அரசியலமைப்பு பேரவை நடுநிலை வகித்தல் அதற்காக 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் 5 பேரை நியமிப்பது உள்ளிட்ட 4 யோசனைகளை முஸ்லிம் சிவில் அமைப்பினர் நீதியமைச்சரிடம் முன்வைத்தனர்.இந்த யோசனைகளை அமைச்சரவையில் முன்வைப்பதாக நீதியமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.