கொரோனா தொற்று காலத்தில் கோவில் ஏலதாரர்கள் வருமான இழப்பை ஈடுகட்ட 36 நாட்கள் கால நீட்டிப்பு- அமைச்சர் தகவல்

318 0

திருக்கோயில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் 36 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா நோய்தொற்று காலங்களில் வார இறுதி நாட்களில் திருக்கோயில்கள் மூடப்பட்டதால் பொது ஏலம், ஒப்பந்தப்புள்ளி தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்டு 36 நாட்கள் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் உரிமைதாரர்களுக்கு இழப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு 36 நாட்கள் காலநீட்டிப்பு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு 09.08.2021 அன்று முடிவடைந்து நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து திருக்கோயில்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.

கோவில்களில் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டதாலும், திருக்கோயில்கள் வழக்கமாக அனைத்து நாட்களிலும் திறக்கப்பட்டுள்ளதாலும், பொது ஏலம்/ஒப்பந்தப்புள்ளி நடத்தப்பட்டு தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்ட ஆண்டு தோறும் நடைபெறும் பலவகை உரிம இனங்களின் உரிமைதாரர்களுக்கு இழப்பு ஏற்பட்ட 36 நாட்களுக்கு ஈடாக அந்தந்த திருக்கோயில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் 36 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருக்கோயில் செயல் அலுவலர்கள் ஏலதாரர்களுக்கு உரிய அனுமதி வழங்கி அதன் நகலினை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கும், ஆணையர் அலுவலகத்திற்கும் அனுப்பிட அலுவலர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்ட இனங்களுக்கு மட்டும் காலநீட்டிப்பு வழங்கப்பட வேண்டும். தொகை முழுவதும் வசூல் செய்யப்படாத இனங்களுக்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டால் ஏற்படும் இழப்பிற்கு தொடர்புடைய அலுவலரே பொறுப்பாக்கப்படுவார் எனவும், உரிம இனங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படும் நாட்கள் போக மீதமுள்ள நாட்களுக்கு கோவில்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு வழக்கமான பொது ஏலம், ஒப்பந்தப்புள்ளி திறப்பிற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவும், கால நீட்டிப்பு வழங்கப்படும்.

காலம் முடிந்த மறுநாள் முதலே அந்தந்த உரிமங்களுக்கு அங்கீகரிக்கப்படும் புதிய உரிமைதாரர், உரிமம் ஏற்க தவறாது ஆவண செய்யும் வகையில் உரிய அங்கீகாரம் முன்கூட்டியே பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.