தமிழர்களின் கறுப்பு தினமான சிறீலங்காவின் சுதந்திர தினம்- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

426 0

இலங்கை சிங்களம் (சிறீலங்கா), தமிழீழம் என்கிற இரு தேசங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த இரு தேசங்களில் ஒன்றான தமிழீழம் அம்மக்களின் சுயவிருப்பை அறியாமல் பலாத்காரமாக பிரித்தானிய காலனியாதிக்கவாதிகளால் கட்டாயமாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அரைக்காலனிய நாடே இலங்கை ஆகும். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியதாக பிரித்தானியா அறிவித்து சிங்களவர்களால் உருவாக்கப்பட்ட தமக்கான தேசியக்கொடி ஏற்றப்படும் போதே அதில் தமிழத் தேசிய இனத்திற்கான இடம் மறுக்கப்பட்டு சிறீலங்காவின் சுதந்திரமானது தமிழர்களுக்கானதில்லையென சிங்களவர்களால் பறை சாற்றப்பட்ட்டது, இதற்கு வித்திட்டது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் கோல்பூர்க் கெமெரன் சீர்திருத்தமும் சோல்பரி அரசியல் யாப்புமாகும். அதன் பின்னர் உருவாக்கப்பட்ட இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் இலங்கை ஒரு பெளத்த சிங்கள நாடு என்றும் இலங்கையின் ஜனாதிபதியாக வருபவர் சிங்கள பெளத்தராக இருக்க வேண்டுமெனவும் சொல்லப்பட்டது.

ஒரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் அந்த நாட்டை ஆளும் தகுதி சிறுபான்மையினருக்கு இல்லையெனச் சொல்லப்பட்டால் அதன் தெளிவான அர்த்தம் இலங்கைத் தீவில் வாழும் தமிழ்த்தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் இரெண்டாம் தர பிரஜைகள் என்பதுதான். நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் எப்படி சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழர்கள் தமக்கானதுமாக எடுத்துக் கொள்ள முடியும்?

இவ்வாறு உருவாக்கப்பட்ட இலங்கையில் ஏற்பட்ட முதல் இனவெறித் தாக்குதல் 1915 இல் கொழும்பு வர்த்தகத்தில் மேலோங்கியிருந்த இஸ்லாமியத்தமிழர்களுக்கு எதிரானதாகும். இத்தாக்குதலை நியாயம்செய்து, சிங்கள ஆளும் வர்க்கத்தை நியாயப்படுத்தி பிரித்தானியா மகாராணியிடம் முறையீடு செய்துவிட்டு திரும்பிவரும் வேளையில்தான் சர்.பொன் இராமநாதன் சிங்களவர்களால் தேரில் இழுத்துவந்து கௌரவிக்கப்பட்டார். 1947 போலிச்சுதந்திர அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின், சிங்கள ஆளும் கும்பல் தமது அதிகாரத்தை ஏகபோகமாக்கும் பொருட்டு சிங்களப் பெருந்தேசிய இனத்தை தம் பின்னால் திரட்டும் நோக்கில் சிங்களப் பேரினவாதத்தையும், பௌத்த மதவாதத்தையும் தமது கருத்தாயுதமாக ஏந்தினர்.

அடுத்த தாக்குதல் மலையகத் தமிழ் மக்களின் பாராளுமன்ற அங்கத்துவத்தின் மீது பாய்ந்தது. மலையகத் தமிழர்கள் வாக்குரிமை, குடியுரிமை பறிக்கப்பட்டு தேசமற்ற நவீன கூலி அடிமைகள் ஆக்கப்பட்டனர். அன்றைய இலங்கையின் சனத்தொகையில் இலங்கையில் இருந்த தமிழ் பேசும் மக்கள் சிங்களவர்களின் சனத்தொகைக்கு ஏறத்தாள மிக அண்மைய வீதமாகக் காணப்பட்டார்கள். இந் நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தாம் சிறுபான்மையாகிவிடுவோமென்பதை உணர்ந்த சிங்கள ஆட்சியாளர்கள் அங்கிருந்த மலையக தமிழ் மக்களை குடியுரிமையைப் பறித்து வெளியேற்றினர், சிங்களவர்களின் இந்தச் சதிக்கு வடக்கை பிரநிதித்துவம் செய்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இருவர் ஆதரவாக வாக்களித்து மாபெரும் வரலாற்றுத் துரோகத்தை இழைத்தனர். இவர்கள் மட்டும் அன்றைக்கு சிங்கள அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருந்தால் இன்று இலங்கையில் தமிழர்களே பெரும்பான்மை தேசிய இனமாக இருந்திருப்பார்கள், பாரிய தமிழனப்படுகொலை கண் முன்னே நடந்தும் அன்று தமிழரசியல் வாதிகள் செய்த துரோகத்தினையே மீண்டும் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் தமிழரசியல்வாதிகள் செய்கிறார்களென்பது கண்டிக்கப்பட வேண்டிய கசப்பான உண்மையாகும்.

அதனைத் தொடர்ந்து அதிகாரவர்க்கத்தில் இருந்து (அரசுமுறையில் இருந்து) தமிழரை வெளியேற்ற கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச்சட்டம் 1958 `கலவரத்தில்` முடிந்தது. இதன் தொடர்ச்சியாக `கலவரம்` என்கிற ஆயுதம் 1983 வரை தமிழீழ தேசத்தின் மீது 25 ஆண்டுகள் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டது. 1961இல் சிறீ எதிர்ப்புக் `கலவரம்`, 1977 சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான `கலவரம்`, 1981இல் மாகாண சபைத் தீர்வை எதிர்த்த மக்களுக்கு எதிரான படுகொலை, 1983இல் இலங்கைத் தழுவிய தமிழினப் படுகொலையென அனைத்துத் தமிழ் அடையாளம் மீதும் சிங்களப் பேரினவாதக் காட்டுமிராண்டி வெறியாட்டம் கட்டவிழ்க்கப்பட்டது.

இதனால் வெகுண்டெழுந்த வெகுஜன உணர்வின் தாக்கத்தால் சமரசவாதத் தலைவர்களான செல்வா தலைமையில் சமஷ்டிக் கட்சி, பின்னாளில் தமிழர் கூட்டணி, தனித் தமிழீழத் தீர்மானத்தை 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றியது. 1977* தேர்தலில் ஈழத் தமிழர்கள் தனி ஈழத்திற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சிக்கு (தமிழர் கூட்டணி) வாக்களித்ததால் அக்கட்சி 100 சதவீத இடங்களைக் கைப்பற்றியது. பின்னர் அக்கட்சி தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு துரோகமிழைத்தது. அத்தகைய ஒரு சூழலில்தான் அரசியல் வழியில் அமைதி வழியில் பெறமுடியாத போது தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்துக் கிளம்பி முள்ளி வாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை மெளனிப்பதாக அறிவித்தது வரை சென்றது.

இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காலத்தின் முன்னிருந்து தமிழ் பேசும் மக்கள் மீது சிங்களப் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் ஒரு இலெட்சத்து நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பலர் பார்த்திருக்க உலகின் கண்முன் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. யுத்தம் முடிந்ததாகக் கூறப்பட்டு எட்டு வருடங்கள் ஆகியும் இன்னமும் சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நல்லாட்சி என்று சொல்லிக் கொள்கின்ற தற்போதைய பேரினவாத அரசு இன்னமும் எந்தத் தீர்வையும் வழங்க முன் வரவில்லை. காணாமல் போகடிக்கச் செய்யப்பட்டோர் விடையத்திலும் இலங்கையின் தற்போதைய பிரதமர் காணாமல் போகச் செய்யப்பட்டோரென்று இலங்கையில் யாருமில்லையென மிகவும் ஏளனமாக பதிலுரைக்கிறாரே தவிர அது தொடர்பில் எந்த நகர்வையும் செய்ய முனையவில்லை.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையே எமக்கு எதிரானதாக தமிழர்களை இரெண்டாம் தர பிரஜைகளாக வரையறுக்கும் போது அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தினுள் உள்ளடங்கும் 13 ஆம் திருத்தச் சட்டம், 6 ஆம் திருத்தத் சட்டம் என எம்மை ஏமாற்றி காலத்தை இழுத்தடிக்கும் சட்டங்கள் அத்தனையும் வலுவற்றவையே. சிங்களவர்கள் ஆட்சியாளர்கள் என்றைக்குமேதமிழர்களுக்கா அ அரசியல் சம உரிமையை அதிகாரத்தை தரமாட்டார்கள் என்பதனை ஆண்டுகால சிறீலங்காவின் அரசியல் வரலாறு எமக்கு தெளிவாக கற்பித்துள்ளது. ஆதலினால் சிறீலங்காவின் சுதந்திரதினமானது தமிழர்களாகிய எமக்கு என்றைக்கும் கறுப்பு தினமெனப் பிரகடனப்படுத்துவதுடன் தமிழர்களின் பூர்வீக நிலமாகிய வடகிழக்கு இணைந்த தமீழீழ தேசம் எமக்கானதாகும் வரை மக்களவையினராகிய நாம் தொடர்ந்தும் எம் விடுதலைக்காகப் போராடுவோமென உறுதி கொள்வோமாக.