தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குத் தேவையான மற்றும் போதுமான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலைமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே அமைச்சர் ராஜித சேனாரட்ண மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்:-
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
குறிப்பாக சுமந்திரனுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளது. அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் தனது பக்கத்தில் செய்யவேண்டியதை செய்துள்ளது.
கேள்வி:- ஏன் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது என அரசாங்கம் ஆராய்ந்துள்ளதா?
பதில்:- வெளிநாட்டு கொந்தராத்து ஒன்றை நிறைவேற்றும் நோக்கிலேயே இவ்வாறு சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எவ்வாறெனினும் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுமந்திரனின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றோம்.