நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும்

209 0

நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபம் நேற்று ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்றது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்விற்கு யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன்,தலைமை தாங்கியிருந்தார்.

நிகழ்வில் நடேசன் தொடர்பில் அவருடன் ஊடகப்பணியாற்றிய சக ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்களென பலரது நினைவுகூரலுடன் வெளிவந்துள்ள “ஊடகர் ஜி.நடேசன் நினைவலைகள்” நூல் அறிமுகமும் வெளியீடும் நடைபெற்றது.

நாட்டுப்பற்றாளர் நடேசனின் திருஉருவப்படத்திற்கு வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூட்டாக மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பொதுச்சுடரை சட்டத்தரணியும் நடேசனின் மருமகனுமான சுகாஸ் ஏற்றிவைத்திருந்தார்.

“ஊடகர் ஜி.நடேசன் நினைவலைகள்” நூல் நடேசனின் குடும்பத்தினருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை “நடேசனின் ஊடகத்துறை பயணம்” தொடர்பிலான நினைவுரையினை மூத்த ஊடகவியலாளர் இ.தயாபரன்  ஆற்றியிருந்தார்.

ஞாபகார்த்த நினைவுப்பேரூரையினை ‘அரசியல் மற்றும் இதர நெருக்கடிகளை அரசியலமைப்பு தீர்வுகள் மூலமாக முகாமை செய்தல்’-இலங்கையில் அதற்கான சாத்தியங்களும் சவால்களும் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன்,ஆற்றியிருந்தார்.

நிகழ்வின் இறுதியாக இறுதி இனஅழிப்பு யுத்த சாட்சியமான மருத்துவர் வரதராஜா நடிப்பில் உருவான பொய்யா விளக்கு விசேட திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

 

பெருந்திரளாக மதத்தலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களென திரண்டிருந்தனர்.

வடமராட்சி கரவெட்டியில் பிறந்த மூத்த ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் 2004ம் ஆண்டின் மே 31ம் திகதி மட்டக்களப்பில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.