மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிர்மறையான திருத்தத்தையே நீதி அமைச்சர் முன்வைத்துள்ளார் – ரஞ்சித் மத்தும பண்டார

187 0

நாட்டு மக்கள் 19 பிளஸ் ஐ எதிர்பார்த்துள்ள நிலையில் அரசாங்கம் அதனை விடவும் பின்னோக்கிச் சென்றுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் , அவருக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதாகவே நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்வைத்துள்ள 21 ஆவது திருத்தம் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் 19 பிளஸ் அரசியலமைப்பு திருத்தத்தினையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்கும் வகையிலான திருத்ததினையே முன்வைத்துள்ளது.

19 ஆம் திருத்தத்தின் படி ஜனாதிபதிக்கு எவ்வித அமைச்சு பதவிகளையும் வகிக்க முடியாது. ஆனால் 21 இல் ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வகிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் முன்வைத்துள்ள திருத்தத்தில் பாராளுமன்றத்தின் ஊடாகவே ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

அத்தோடு ஜனாதிபதியும் அமைச்சரவையும் பிரதமரின் ஆலோசனைக்கு அமையவே செயற்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளோம். இதன் மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்த முடியும். ஆனால் நீதி அமைச்சரின் திருத்தம் இவற்றுக்கு முரணானதாகவே அமைந்துள்ளது.

19 ஆம் திருத்தத்தினை விடவும் பின்னோக்கிச் செல்ல வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு அதிகாரங்களையோ அமைச்சுக்களையோ வழங்க வேண்டிய அவசியமில்லை.
ற்போது சர்வ கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக சகாக்களின் அரசாங்கமே அமைக்கப்பட்டுள்ளது. எனவே தான் அந்த அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்க நாம் விரும்பவில்லை. ஜனாதிபதி மாளிக்கைக்குள் புகுந்து மக்கள் அவரை வெளியேற்றுவதற்கு முன்பு அவர் தானகவே பதவி விலக வேண்டும் என்றார்.