பாகிஸ்தான் கராச்சியில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு பாதுகாப்புடன் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழாக்களையும் அவர்கள் நடத்தி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் ஒன்றுக்கொன்று எதிரி நாடுகளாக பார்த்து வருகின்றன. காஷ்மீர் எல்லையில் நிலவும் தீவிரவாத தாக்குதல்கள் உலக நாடுகளையே அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதை இந்திய ராணுவம் தொடர்ந்து தடுத்து வருகிறது. இதில் ஏராளமான பாகிஸ்தான் தீவிரவாதிகளும், இந்திய ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக இயங்கி வரும் நிலையில், அங்கு சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் இந்துக்கள் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அங்கு ஆண்டுதோறும், அரசு பாதுகாப்புடன் அச்சமின்றி மாரியம்மன் கோயில் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். வரும் 12-ம் தேதி அக்கோயிலுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ‘அனைத்து கராச்சி மெட்ராஸ் இந்து பஞ்சாயத்’ அமைப்பின் பொருளாளர் சஞ்சீவ் பெருமாள் இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறியதாவது:
எனது பூர்வீகம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் உள்ள கீழ்கவரப்பட்டு. இந்தியா – பாகிஸ்தான் பிரிவதற்கு முன்பே எனது தாத்தா, கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பாகிஸ்தான் நாட்டில், கராச்சியில் உள்ள கோரங்கி நகரமைப்பு பகுதிக்கு வந்துள்ளனர். அங்கேயே குடும்பத்துடன் வாழத் தொடங்கினர். கடலூர் வெகுதூரம் இருப்பதால் உறவினர்களை பார்க்க யாரும் செல்வதில்லை. இப்போது தொடர்பே இல்லாமல் இருக்கிறது.