திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உள்ளாட்சி துறை அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தெருக்களுக்கு சாதிப் பெயர் வைத்திருப்பதை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.சென்னையில் சாதி பெயர் கொண்ட தெருக்கள் பெயர்களை மாற்றும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உள்ளாட்சி துறை அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தெருக்களுக்கு சாதிப் பெயர் வைத்திருப்பதை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன் பேரில் தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர் நீக்கப்பட்டு வருகிறது.
மயிலாப்பூரில் அப்பாவு கிராம தெரு 3-வது தெரு என்று 171-வது வார்டில் உள்ளது. இந்த தெருவின் பெயரில் உள்ள சாதி பெயரை மாநகராட்சி தற்போது நீக்கி மாற்றி அமைத்துள்ளது. அப்பாவு (கி) 3-வது தெரு என்று புதிய பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகரட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் சாதி பெயர்கள் இருந்தால் அதனை மாற்றி அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. சாதி பெயர் மட்டுமின்றி தெரு பெயர் பலகையில் ‘லேன்’ என்று குறிப்பிட்டு இருந்தால் ‘சந்து’ என்று தமிழில் மாற்றம் செய்யப்படுகிறது.
அரசாணையின்படி உள்ளாட்சி துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தெருக்களுக்கோ, பொது இடங்களுக்கோ, கட்டிடங்களுக்கோ சாதிப் பெயர் இருந்தால் மாற்றலாம் என்று அரசாணை உள்ளது.
அதன் அடிப்படையில் தெரு பெயர்களை சரி செய்ய மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
விரைவில் மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். சாதி பெயர் நீக்க நடவடிக்கையை அந்தந்த வார்டில் உள்ள என்ஜினீயர்கள் மேற்கொள்வார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.