நாட்டில் தடுக்க முடியாத அளவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும். உணவு வீண்விரயத்தை இயலுமான அளவு தவிர்த்துக்கொள்ள வேண்டும். விவசாய கொள்கையை அரசாங்கம் விரைவாக மாற்றியமைக்க வேண்டும். சிறுபோக பயிர்ச்செய்கை தோல்வியடைந்தால் முழு நாடும் பாரதூரமான சவால்களை எதிர்க்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரபே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சிறுபோக விவசாய நடவடிக்கைக்கு 80,000 மெற்றிக்தொன் யூரியா மற்றும் 10,000 மெற்றிக்தொன் சுபர் பொசுபேட் அவசியம்.அரச உர நிறுவனங்கள் வசமுள்ள வரையறுக்கப்பட்ட இரசாயன உரம் அரச விவசாய காணிகளுக்கு வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் வசம் குறைந்தளவான உரம் மாத்திரமே கையிருப்பில் உள்ளது.
தவறான உர கொள்கையினால் பெரும்போக பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாய துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும்,எதிர்வு கூறல்களையும் அலட்சியப்படுத்தி அரசியல்வாதிகள் இன்று அமைதி காப்பது வேடிக்கையாகவுள்ளது. விவசாய கொள்கை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக வகுக்கப்பட வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
நாட்டின் பொருளாதாரம் தீவிரமடைந்துள்ள நிலைமையில் எதிர்வரும் காலங்களில் உணவு தட்டுப்பாட்டையும் எதிர்க்கொள்ள நேரிடும்.தடுக்க முடியாத அளவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் மாத்திற்கு பிறகு நாட்டில் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும்.ஆகவே பொது மக்கள் உணவினை வீண்விரயம் செய்வதை இயலுமான அளவு தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
பெருமளவிலான விவசாயத்திற்கு தான் உரம் அவசியமானது.தற்போதைய நிலைமையில் பெருமளவிலான விவசாயம் தொடர்பில் எம்மால் கருத்து குறிப்பிட முடியாது.ஆகவே பொது மக்கள் தமக்கு தேவையான மரகறிகள்,கிழங்கு வகைகள்,உள்ளிட்ட உணவு பொருட்களை உற்பத்தி செய்துக்கொள்ள வேண்டு;ம்.வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க அரசாங்கம் புதிய திட்டங்களை விரைவாக செயற்படுத்த வேண்டும் என்றார்.