அரசியல் அமைப்பில் 21ஆவது திருத்தத்தை நிறைவேற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் எதிர்பார் பார்ப்பாகும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
20ஆவது யாப்பு திருத்தத்திலுள்ள குறைகளை சரி செய்து 21ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அரசியல் யாப்பு தொடர்பில் பல ஜனாதிபதிகளின் கீழ், அடிக்கடி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.. சில சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் யாப்பை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 21ஆவது அரசியல் யாப்பு திருத்ததில் பெரும்பாலான நிறுவனங்கள் அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
21ஆவது அரசியல் யாப்பு திருத்தம் ஒரு நபரை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் இந்த அரசியல் யாப்பு செயற்பாடுகள் இடம்பெற வேண்டும். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரை பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. பல தடவைகள் நாட்டின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க அந்தப் பதவிக்காக மீண்டும் நியமிக்கப்பட்டமை பொருத்தமான விடயம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மஹிந்த ராஜபக்க்ஷ பதவியில் இருந்து விலகியதனால் பிரதமர் பதவிக்கு வெற்றிடம் நிலவிய சந்தர்ப்பத்தில் அதனை பொறுப்பேற்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வரவில்லை . பிரதமர் பதவியை பொறுப்பேற்பவதைவிட பொதுத் தேர்தலுக்குச் செல்வதே பொருத்தம் என எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடாகும். எனினும், குறித்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலுக்கு செல்வது பொருத்தமில்லை. நாடு ஸ்திரத்தன்மையினை இழந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும் வகிபாகம் எதிர்க்கட்சிக்கு உண்டு. எனினும், பிரதான எதிர்க்கட்சி குறித்த பொறுப்பினை நிறைவேற்றாமை கவலைக்குரிய விடயம் என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.