21 ஆவது திருத்தச்சட்ட வரைபு வர்த்தமானி அறிவித்தலின் பின்னரே கூட்டமைப்பின் முடிவு- சுமந்திரன்

171 0

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள முன்மொழியப்பட்ட 21ஆவது திருத்தச்சட்ட வரைவு உப்புச்சப்பற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சட்டமூலத்திற்கான வரைவு இறுதி செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள உத்தேச 21ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்பெற்றபோது ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபாலசிறிசேன தனது நூறுநாள் வேலைத்திட்டத்தினுள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான செயற்பாட்டை முன்னெடுத்திருந்தார்.

இதற்காக அரசியலமைப்பில் 19ஆவது திருத்தச்சட்டம் மேற்கொள்ளப்பட்டது. முதலில் வரையப்பட்ட 19ஆவது திருத்தச்சட்டமூலத்தின் வரைவானது நிறைவேற்றப்படுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையாக காணப்பட்ட விடயங்கள் நீக்கப்பட்டன.  மூன்று தடவைகள் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

19ஆவது திருத்தச்சட்டம் குறைபாடுகளைக் கொண்டிருந்தது. முழுமையாக நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டிருக்கவில்லை.  நிபந்தனைகளுடன் மூன்று அமைச்சுக்களை வகிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், புதிய அரசியலமைப்பொன்று உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்ற அடிப்படையில் தான் அப்போது நிறைவேற்று அதிகாரத்தினை கணிசமாக குறைக்கும் 19ஆவது திருத்தச்சட்டத்திற்கு நாம் ஆதரவினை வழங்கினோம்.

ஆனால் துரதிஷ்டவசமாக புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றும் பணிகள் வெற்றியளித்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் தற்போது 21ஆவது திருத்தச்சட்டத்திற்கான வரைவொன்றை நீதி அமைச்சர், பிரதமர் ஊடாக அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

முன்னதாக, நிறைவேற்று அதிகாரங்களை முழுமையாக நீக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையொன்றை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார சபாநாயகரிடத்தில் கையளித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வரைவானது, 19ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்பட்ட விடயங்களையும் விடவும் மிகவும் மலினப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. குறிப்பாக ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவிகளை வகிப்பதற்கும், மீளப்பெறுவதற்கும் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான அரசியலமைப்பு திருத்தம் அவசரமாகக் கொண்டுவருவதற்கான காரணம் என்ற கேள்விகள் எமக்கு உள்ளன. இது வெறுமனே மக்களை ஏமாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.

ஆகவே, 21ஆவது திருத்தச்சட்டத்தினை மேற்கொள்வதாக இருந்தால் அது ஏற்கனவே தனிபர் பிரேரணையாக கையளிக்கப்பட்ட வரைவாகவோ அல்லது அதனையொத்த ஏற்பாடுகளைக் கொண்டதாகவே இருக்க வேண்டும். அவ்வாறில்லது அரசியலமைப்பு திருத்தமொன்றைச் செய்வதில் அர்த்தமில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த திருத்தச்சட்ட வரைவு குறித்த தீர்மானத்தினை கூடி ஆராய்ந்த பின்னரே அறிவிக்கவுள்ளது. அதேநேரம், குறித்த வரைவானது வர்த்தமானி அறிவித்தலில் இறுதி செய்யப்பட்டு வெளியிடும் வரையில் பொறுத்திருக்கவுள்ளோம் என்றார்.