தொழிற்சாலைகளின் மின் கட்டணங்களில் திருத்தம் உறுதி – மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன

142 0

24 மணித்தியாலமும் தடையின்றி மின்விநியோகத்தை வழங்க வேண்டுமாயின் எரிபொருள் கொள்வனவின் போது மேலதிகமாக 100 மில்லியன் டொலர்களை ஒதுக்க வேண்டும்.

300 அலகிற்கும் அதிகமான மின்சாரத்தை பாவிக்கும் கைத்தொழில்சாலைகளின் மின்கட்டணம் நிச்சயம் திருத்தம் செய்யப்படும்.

மின்சாரத்துறை எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையினை பெரும்பாலான மக்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சின் காரியாலயத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விநியாக கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு கட்டம் கட்டமாக தீர்வு வழங்கப்படுகிறது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரிப்பு நிலையத்தின் பணிகள் இரண்டு மாதகாலத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறைக்கு ஒப்பீட்டளவில்  தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமானங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள்,மண்ணெண்ணெய் ஆகியவற்றை தடையின்றி விநியோகிக்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும்,ஒரு சில பிரதான ஊடகங்களிலும் வெளியான செய்தி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக பொது மக்கள் நாட்கணக்கில் ஒன்று கூடி நிற்பதற்கும்,தேவைக்கு மேலதிகமாக எரிபொருளை பதுக்கி வைப்பதற்கும் பிரதான காரணியாக அமைந்துள்ளது

நாட்டு மக்களுக்கு 24 மணித்தியாலமும் தடையின்றி மின்விநியோகத்தை வழங்க வேண்டுமாயின்  எரிபொருள் ஊடாக மின்னுற்பத்தியில் ஒரு மாதத்திற்கு மாத்திரம் 42 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும்,63ஆயிரம் மெற்றிக்தொன் உராய்வு எண்ணெயும் அவசியம் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இத்தொகையை எரிபொருள் கொள்வனவிற்கு மாத்திரம் ஒருமாதத்திற்கு மேலதிகமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்க வேண்டும்.

இலங்கை மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.ஒரு வருடத்தில் மின்னுற்பத்திக்கான செலவு 750 பில்லியனாக காணாப்படும் பட்சத்தில் மின்னுற்பத்தி ஊடாக கிடைக்கப்பெறும் வருடாந்த வருவாய் 250 பில்லியனாக காணப்படுகிறது.

ஒரு மின் அலகு உற்பத்திக்கு சுமார் 47.18ரூபா செலவாகும் நிலையில் ஒரு மின் அலகிற்காக குறைந்தப்பட்ச கட்டணம் அறவிடப்படுகிறது.

மத தலங்களிடமிருந்து குறைந்தளவு மின்கட்டணம் அறவிடப்படுகிறது.இருப்பினும் மத தலங்களில் தான் அதிக மின்வீண்விரயம் செய்யப்படுகிறது.

மின்னுற்பத்திக்கான கேள்வி மற்றும் செலவு அதிகரித்துள்ள நிலையில்  மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையும்,பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவும் வலியுறுத்தியுள்ளன.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினர்,பாடசாலை,வைத்தியசாலை மற்றும் மத தலங்கள் தவிர்த்து 300 அலகிற்கும் அதிகளில் மின்சாரத்தை பாவிக்கும் கைத்தொழில்சாலைகள் உட்பட ஏனைய தரப்பினருக்கான மின்கட்டணம் நிச்சயம் திருத்தம் செய்யப்படும்.

மின்விநியோக கட்டமைப்பு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது என்பதை பெரும்பாலான மக்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை.

;மின்பாவனையாளர்கள் நிலுவை கட்டணத்தை செலுத்த வேண்டும் ஏனெனில் நாடு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.