அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும் போது முறையான ஒழுங்கு முறைமை பின்பற்றப்பட வேண்டும் இல்லாவிடின் நல்லாட்சி அரசாங்கத்தில் அரச தலைவர்களுக்கிடையில் நிலவிய அதிகார போட்டித்தன்மை மீண்டும் நிலவும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முழு நாட்டு மக்களும் அரசியலமைப்பு திருத்தத்தை கோருகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மக்களின் நிலைப்பாட்டிற்கு முரணாக செயற்பட முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
21ஆவது திருத்தத்தை வெகுவிரைவில் நிறைவேற்றுமாறு பிரதமரிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள்.
ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை பாதுகாப்பதை விடுத்து தம்மை தெரிவு செய்த மக்களின் அபிலாசைக்கு அமைய செயற்பட வேண்டும்.
21ஆவது திருத்த்ததை நிறைவேற்ற பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே சமூக கட்டமைப்பில் நிலவும் அமைதியற்ற தன்மைக்கு தீர்வு காண முடியும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் திருத்த யோசனை 21ஆவது சட்டமூல வரைபில் உள்வாங்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றிற்கு பொறுப்பாக்கும் போது அதனை செயற்படுத்த முறையான வழிமுறை ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
ஏனெனில் நல்லாட்சி அரசாங்கத்தில் அரச தலைவர்களுக்கிடையிலான அதிகார போட்டி முழு அரசிலயமைப்பு திருத்தத்தையும் பலவீனப்படுத்தியது.
இரட்டை குடியுரிமை உடைய நபர் அரசியலில் அல்ல அரச உயர்பதவி வகிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.
இரட்டை குடியுரிமையுடைய இருவர் இதுவரையில் அரசியல் மற்றும் அரச உயர் பதவியில் செல்வாக்கு செலுத்தியுள்ளார்கள்.
இவ்விருவரினால் நாட்டுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை மாறாக எதிர்வினைகள் மாத்திரமே தோற்றம் பெற்றுள்ளன என்றார்.