உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து முன்னெடுத்து வருகின்றேன். எனவே அச்சம் கொள்ள வேண்டாம்.
21 ஆவது திருத்தம் தொடர்பில் நீதியமைச்சர் அனைத்து விடயங்களையும் கையாண்டு வருகின்றார். இவ்வாரத்தில் கட்சி தலைவர்களுக்கு முழுமையான வரைபு அனுப்பி வைக்கப்படுவதுடன் அடுத்த பாராளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சு பதவிகள் மற்றும் 21 ஆவது திருத்தம் குறித்து அமைச்சர்கள் மற்றும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 21 ஆவது திருத்தம் மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
எந்தவொரு அமைச்சு பதவிகளுக்கும் ஊதியமோ கொடுப்பனவோ வழங்கப்பட மாட்டாது. அதே போன்று சுதந்திர கட்சிக்கு உரிய இராஜாங்க அமைச்சுக்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாரம் தீர்மானிப்பார் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 21 ஆவது திருத்தத்தின் முழுமையான வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சுக்களை பகிர்ந்தளிப்பது குறித்து பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. பிரதானமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய தரப்புகளுக்கு இடையில் எந்தெந்த அமைச்சுக்களை பகிர்ந்தளிப்பது என்பது குறித்து பிரதமருடன் சுதந்திர கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் சந்திப்பை நடத்தி கலந்துரையாடியது.
;அதே போன்று பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளனர். மேலும் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ள ஏனைய கட்சிகளின் கோரிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாரத்தில் இராஜாங்க அமைச்சு சிக்கலுக்கு இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளது. நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு புதிய அரசாங்கத்தில் பதவிகளை பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கு ஊதியமோ எவ்விதமான கொடுப்பனவோ வழங்காமலிருக்கும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட கூடாது என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
அதேபோன்று 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் குறித்தும் அமைச்சர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதாவது இரட்டை குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்தவம் செய்ய இயலாது, பிரதமரை நீக்கும் ஜனாதிபதி அதிகாரத்தை நீக்குதல் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளை நியமிக்கும் போது பிரதமரின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளல் போன்ற விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என பிரதமரை சந்தித்த அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு பதிலளித்துள்ள பிரதமர், அச்சம் கொள்ள வேண்டாம். நான் உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன். முடியா விட்டால் விலகி செல்வேன். ; 21 ஆவது திருத்தம் தொடர்பில் நீதியமைச்சர் அனைத்து விடயங்களையும் கையாண்டு வருகின்றார்.
இவ்வாரத்தில் கட்சி தலைவர்களுக்கு முழுமையான வரைபு அனுப்பி வைக்கப்படும். அதே போன்று அடுத்த பாராளுமன்ற அமர்வில் 21 ஆவது திருத்தம் கொண்டு வரப்படும். அப்போது அனைவருக்கும் உள்ளடக்கத்தை அறியலாம் என குறிப்பிட்டுள்ளார்.