தாமதமின்றி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்

211 0

அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடுகையில் தற்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டமூலம் மிகவும் பின்னடைவானதொரு திருத்தமாகவே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தாமதமின்றி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்த செவ்வாய்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அத்திருத்தம் தொடர்பில் அரசியல்கட்சிகளிடம் யோசனைகள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி அத்திருத்தம் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று கோரியபோது, அதற்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் வெறுமனே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றதே தவிர, அதன் இறுதி வடிவம் இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை.

எனவே அதன் இறுதி வடிவம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து கட்சிக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

ஆனால் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் என்னவென்றால், ஏற்கனவே கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் வரையறுக்கப்பட்டளவிலான முன்னேற்றத்தையே காண்பித்தது.

ஆனால் தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 21 ஆவது திருத்தம் அதனை விடவும் பின்னடைவான திருத்தமாகவே இருக்கின்றது.

குறிப்பாக ஜனாதிபதியினால் அமைச்சுப்பதவிகளை வகிக்கமுடியாது என்று 19 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள போதிலும், 21 ஆவது திருத்தத்தில் அவர் அமைச்சுப்பதவிகளை வகிப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை முதலில் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திவிட்டு, பின்னர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்துக் கவனம் செலுத்தலாம் என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

இரண்டு விடயத்தையும் தனித்தனியாகச் செய்யவேண்டும் என்று கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எனவே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருக்கின்றது என்றார்.